47 ஆண்டுகளில் முதல்முறை; சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்த சாதனையை முதலில் செய்தவர் மோட்கன்ஹல்லி ஜெய்சிம்ஹா ஆவார். இவர் 1968இல் பிரிஸ்பேன் டெஸ்டில் 74 மற்றும் 101 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து சுனில் கவாஸ்கர் 1977இல் அதே பிரிஸ்பேனில் நடந்த டெஸ்டில் 3 மற்றும் 113 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், அதற்கு பிறகு 47 ஆண்டுகள் கழித்து தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி 2023-25இல் அதிக சதங்கள்
நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்கு சதங்களை அடித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் மற்ற எவரையும் விட அதிகபட்சமாகும். இந்த பட்டியலில் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் தலா 3 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இதற்கிடையே, சர்வதேச அளவில் நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தலா 4 சதங்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேன் வில்லியம்சன் கூட்டாக மூன்றாவது இடத்தில் உள்ளனர். இலங்கையின் கமிந்து மெண்டிஸ் 5 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 6 சதங்களுடன் முதலிடத்திலும் உள்ளனர்.