LOADING...
கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! இனி ஃபாஸ்டேக் KYV டென்ஷன் கிடையாது; NHAI வெளியிட்ட புதிய விதி!
ஃபாஸ்டேக் KYV விதிகளில் தளர்வு

கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! இனி ஃபாஸ்டேக் KYV டென்ஷன் கிடையாது; NHAI வெளியிட்ட புதிய விதி!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), கார் உரிமையாளர்களுக்கான ஃபாஸ்டேக் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 1, 2026 முதல், கார்களுக்கான வழக்கமான வாகனச் சரிபார்ப்பு (KYV) நடைமுறை முடிவுக்கு வருகிறது. ஃபாஸ்டேக் ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகும், மீண்டும் மீண்டும் வாகன ஆவணங்களைச் சரிபார்க்கக் கோருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்த புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஃபாஸ்டேக்குகளுக்கு வழக்கமான இடைவெளியில் KYV சரிபார்ப்பு செய்யத் தேவையில்லை. முறையற்ற பயன்பாடு அல்லது தவறான தகவல் போன்ற குறிப்பிட்ட புகார்கள் வரும்போது மட்டுமே அந்தத் தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டும் சரிபார்ப்பு நடத்தப்படும்.

புதிய நடைமுறை

வாகன விவரங்களை சரிபார்க்க புதிய நடைமுறை

கணினியின் நம்பகத்தன்மையைத் தக்கவைக்க, ஃபாஸ்டேக் வழங்கும் வங்கிகளுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, வங்கிகள் இனி ஒரு ஃபாஸ்டேக்கை ஆக்டிவேட் செய்வதற்கு முன்பே, மத்திய அரசின் 'வாகன்' தளத்தில் இருந்து வாகன விவரங்களைச் சரிபார்ப்பது கட்டாயமாகும். இணையதளம் மூலம் விற்கப்படும் ஃபாஸ்டேக்குகளும், வங்கிகள் உரிய ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே பயன்பாட்டிற்கு வரும். வாகன விவரங்கள் 'வாகன்' தளத்தில் இல்லாத பட்சத்தில், வாகனப் பதிவுச் சான்றிதழை முழுமையாகச் சரிபார்க்க வேண்டியது அந்தந்த வங்கிகளின் பொறுப்பாகும். இந்த மாற்றத்தின் மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தாமதங்கள் குறையும் என்றும், மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எதிர்பார்க்கிறது.

Advertisement