ஜனவரி 8 முதல் தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
செய்தி முன்னோட்டம்
பொங்கல் திருநாள் நெருங்கிவிட்ட வகையில், அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஜனவரி 8, 2026 அன்று சென்னையில் இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, அன்றைய தினமே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கும். இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கன்
டோக்கன் விநியோகம் மற்றும் ஏற்பாடுகள்
தமிழகத்தில் உள்ள சுமார் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் நெரிசலின்றிப் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காக, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்பட உள்ளது. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையைக் காண்பித்து பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே அனைத்துப் பயன்களும் பொதுமக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக ரொக்கத்தொகை வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு ரொக்கப்பணமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.