பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. எனினும் மிட்செல் மார்ஷின் (6 விக்கெட்டுகள்) அபார பந்துவீச்சால் 180 ரன்களுக்கு சுருண்டது. நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 337 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 140 ரன்களும், மார்னஸ் லபுசாக்னே 64 ரன்களும் எடுத்தனர். ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் வெற்றி இலக்கு
முதல் இன்னிங்ஸ் முடிவில் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி, 175 ரன்களுக்கு சுருண்டது. இதிலும், நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிறப்பாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 19 ரன்கள் இலக்குடன் கடைசி இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா விக்கெட் 3.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் தலா 1 வெற்றியுடன் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.