பார்டர் கவாஸ்கர் டிராபி: 38 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை முறியடித்தது யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி
பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்துள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மொத்தமாக 150 ரன்களுக்கு சுருண்டாலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சிறந்த கம்பேக் கொடுத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் 201 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோராகும். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஜோடி 1986இல் 191 ரன்களுடன் இந்த சாதனையை வைத்திருந்த நிலையில், அதை தற்போது இருவரும் முறியடித்துள்ளனர்.
தொடக்க ஜோடியின் அதிக ரன்கள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் அதிக பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற சாதனையையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது, சுனில் கவாஸ்கர் மற்றும் கே ஸ்ரீகாந்த் 1986இல் சிட்னி மைதானத்தில் எடுத்த 191 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். மூன்றாவது இடத்தில் மெல்போர்னில் 1981இல் சேத்தன் சவுகான் மற்றும் சுனில் கவாஸ்கர் எடுத்த 165 ரன்களும், நான்காவது இடத்தில் 2003இல் மெல்போர்னில் ஆகாஷ் சோப்ரா மற்றும் வீரேந்திர சேவாக் எடுத்த 141 ரன்களும் உள்ளன. ஐந்தாவது இடத்தில், 1948இல் மெல்போர்னில் எம்.எச்.மன்கட் மற்றும் சி.டி.சர்வதே எடுத்த 124 ரன்கள் உள்ளன.