உலகிலேயே முதல்முறை! இந்திய ராணுவ பீரங்கிகளில் ரேம்ஜெட் குண்டுகள்; ஐஐடி மெட்ராஸின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், உலகிலேயே முதல்முறையாக ரேம்ஜெட் (Ramjet) தொழில்நுட்பத்தால் இயங்கும் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது. பொதுவாக ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ரேம்ஜெட் தொழில்நுட்பம், இப்போது இந்திய ராணுவத்தால் பீரங்கி குண்டுகளில் புகுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பீரங்கியிலிருந்து குண்டு ஏவப்படும்போது, அது காற்றில் மிக அதிவேகமாக (Mach 2) பயணிக்கும். அப்போது காற்று தானாகவே அழுத்தப்பட்டு, எரிபொருளுடன் இணைந்து உந்துவிசையை உருவாக்குகிறது. இதில் தனியாக டர்பைன்கள் அல்லது கம்ப்ரசர்கள் கிடையாது. இது காற்றின் மூலமே இயங்குவதால், மற்ற குண்டுகளை விட அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.
சாதனை
ஐஐடி மெட்ராஸின் சாதனை
இந்த அதிநவீனத் தொழில்நுட்பம் ஐஐடி மெட்ராஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வாரியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்கள் பி.ஏ.ராமகிருஷ்ணா மற்றும் எஸ்.வர்மா ஆகியோர் பல ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு இதை வடிவமைத்துள்ளனர். ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண பீரங்கி குண்டுகளை விட இந்த ரேம்ஜெட் குண்டுகள் 30% முதல் 50% வரை அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கும்.
சோதனை
சோதனை வெற்றி
இதை ராணுவத்திடம் ஏற்கனவே உள்ள 155மிமீ பீரங்கிகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எம்777 அல்ட்ரா லைட் ஹோவிட்சர் பீரங்கிகளிலும் பயன்படுத்த முடியும். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் இதற்கான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் போது, பீரங்கி படையில் ரேம்ஜெட் குண்டுகளைப் பயன்படுத்தும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். இது எல்லைப் பாதுகாப்பில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமான நிலையை உருவாக்கும்.