மகளிர் ஐபிஎல் 2024க்கான ஏலத்திற்கு 165 வீராங்கனைகள் பதிவு
டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏல நிகழ்வில் 165 விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக சனிக்கிழமை (டிசம்பர் 2) பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலப் பட்டியலில் 104 இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும், 61 வெளிநாட்டு வீராங்கனைகளும் உள்ளனர். 61 வெளிநாட்டு வீராங்கனைகளில் 15 பேர் ஐசிசியின் முழு உறுப்பினர் அல்லாத அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் என பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஐந்து அணிகளில் மொத்தமாக 21 வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட 60 வீராங்கனைகள் ஐந்து அணிகளில் தக்கவைக்கப்பட்டனர். மேலும், 29 வீராங்கனைகள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அணிகளின் பட்ஜெட்
குஜராத் ஜெயன்ட்ஸ் மிகப்பெரிய ரூ.5.95 கோடி பர்ஸுடன் அதிக தொகையுடன் ஏலத்தில் களமிறங்க உள்ளது. அவர்கள் அதிகபட்சமாக 10 வீராங்கனைகளை கைப்பற்றலாம். நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ஐந்து காலி இடங்களுடன் மிகச்சிறிய பர்ஸை (ரூ.2.1 கோடி) கொண்டு ஏலத்தில் களமிறங்க உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.2.25 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ.3.35 கோடியும், உபி வாரியர்ஸ் ரூ.4 கோடியும் ஏலத்திற்கான பர்ஸில் காலியாக வைத்துள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் முறையே மூன்று, ஏழு மற்றும் ஐந்து காலி இடங்களைக் கொண்டுள்ளன.