2024 மகளிர் ஐபிஎல்லில் மாற்றம் : ஐபிஎல் தலைவர் அருண் துமால் அறிவிப்பு
தொடக்க மகளிர் ஐபிஎல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, ஐபிஎல் தலைவர் அருண் துமால் செவ்வாயன்று (ஏப்ரல் 4), அடுத்த சீசனில் ஆடவர் ஐபிஎல்லை போல் உள்ளூர் மற்றும் வெளியூர் வடிவத்தில் விளையாடப்படும் என்று அறிவித்தார். எனினும் அணிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐந்து அணிகள் மட்டுமே இருக்கும் என தெரிவித்தார். முன்னதாக, முதல் மகளிர் ஐபிஎல் ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் போட்டியின் நெருக்கமான அட்டவணை மற்றும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு அருகாமையில் இருந்ததால், பிசிசிஐ அனைத்து விளையாட்டுகளையும் மும்பையில் உள்ள இரண்டு இடங்களில் மட்டுமே நடத்த முடிவு செய்தது.
தனது பதவிக் காலத்தில் மிகப்பெரிய சவால் மகளிர் ஐபிஎல் எனக் ஊறிய துமால்
மகளிர் ஐபிஎல் போட்டியை தனது பதவிக்காலத்தின் மிகப்பெரிய சவாலான ஒன்று என கூறிய துமால், உள்ளூர் மற்றும் வெளியூர் விளையாட்டுகள் அணிகளுக்கு ரசிகர் பட்டாளத்தை அதிகரிக்க பெரிதும் உதவுவதாகவும், அடுத்த சீசனில் இதை நடைமுறைப்படுத்த பிசிசிஐ விரும்புவதாகவும் கூறினார். முதல் மூன்று சீசன்களில் ஐந்து அணிகள் மட்டுமே பங்கேற்கும் நிலையில், ஆறாவது அணியை அறிமுகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு ஒரு காரணம் தரமான உள்ளூர் வீராங்கனைகள் இல்லாதது தான் என துமால் மேலும் கூறினார். இதற்கிடையே முதல் மகளிர் ஐபிஎல் சீசனில் ஹர்மான்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.