சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் அவரது உடற்தகுதிதான், பிசிசிஐ அதிகாரி விளக்கம்
ரஞ்சி கோப்பையில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வந்தபோதிலும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சர்ஃபராஸ் கான் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். சர்ஃபராஸ் கான் தனது கடைசி மூன்று ரஞ்சி கோப்பை சீசன்களில் 2,566 ரன்களை குவித்தார். இதில் 2019/20 சீசனில் 928 ரன்களும், 2022-23ல் 982 ரன்களும், 2022-23 சீசனில் 656 ரன்களும் எடுக்கப்பட்டன. இதன் மூலம் முதல் தர சராசரியை 79.65 ஆகக் கொண்டு, கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக முதல்தர சராசரியை கொண்டுள்ளார். இவ்வளவு சிறப்புகளை கொண்டிருந்தும் அவர் சேர்க்கப்படாததற்கு சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யாததன் பின்னணி
பிசிசிஐ அதிகாரி ஒருவர் பெயர் வெளியிட விரும்பாமல் இது குறித்து கூறுகையில், சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும், இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததற்கு முக்கிய காரணம் அவரது உடற்தகுதி என்று கூறியுள்ளார். அவரது உடற்தகுதி சர்வதேச வீரர்களுக்கான தரத்தில் இல்லை எனக் கூறிய அந்த அதிகாரி, மேலும் மைதானங்களில் மற்றும் மைதானங்களுக்கு வெளியே சர்ஃபராஸ் கானின் அணுகுமுறை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றும் கூறியுள்ளார். ஒரு சீசனில் 900 ரன்களை அடுத்தவரை தேவையில்லாமல் நிராகரிக்க தேர்வாளர்களுக்கு எந்த காரணமும் இல்லை எனக் கூறிய அவர், சர்ஃபராஸ் கான் தனது அணுகுமுறை மற்றும் உடற்தகுதியை மேம்படுத்தினால், நிச்சயம் சேர்க்கப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.