பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க திட்டம்; உடற்தகுதியை ஆய்வு செய்கிறது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது மறுபிரவேசத்தை தொடர்வதால் அவரது உடற்தகுதியை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. நீண்ட நாள் காயத்துக்குப் பிறகு மீண்டும் காலத்திற்கு திரும்பிய முகமது ஷமி, ரஞ்சிக் கோப்பையைத் தொடர்ந்து தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பையில் பங்கேற்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் முகமது ஷமி சேர்க்கப்படவில்லை என்றாலும், பிசிசிஐ அவரை சேர்ப்பதற்கான சாத்தியத்தை மதிப்பீடு செய்து வருகிறது. ஷமியின் உடற்தகுதியை மதிப்பிடுவதற்கு அனுமதி வழங்குவதற்கு முன், விளையாட்டு அறிவியல் துறை குழு மற்றும் தேசிய தேர்வாளர் ராஜ்கோட்டில் அவரை கண்காணித்து வருகின்றனர்.
ராஜ்கோட்டில் பெங்கால் அணிக்காக விளையாடும் முகமது ஷமி
களத்தில், ராஜ்கோட்டில் மேகாலயாவுக்கு எதிரான பெங்கால் அணி குரூப் ஏ மோதலின் போது முகமது ஷமி ஒழுக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-0-16-0 என்ற விகிதத்தில் சிறப்பாக செயல்பட்டார். ஷமியின் செயல்பாட்டை விளையாட்டு அறிவியல் துறை குழு கண்காணித்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பிசிசிஐ அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அணியில் சேர்ப்பது குறித்து முடிவுஎடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஆஸ்திரேலியாவில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சிறப்பாக செயல்பட்டு வருவதால், முகமது ஷமி அணியில் இணைக்கப்படுவாரா என்பது கேள்விக்குறிதான் எனவும் கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.