வங்கதேசம் vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் : வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச கிரிக்கெட் அணி சரித்திரம் படைத்துள்ளது. இது நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேசம் பெறும் இரண்டாவது வெற்றியாகும் மற்றும் சொந்த மண்ணில் நியூஸிலாந்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்துவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேசம் முதல் இன்னிங்சில் 310 ரன்கள் குவித்தது. மொஹமதுல் ஹசன் ஜாய் 86 ரன்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 317 ரன்கள் எடுத்து 7 ரன்கள் முன்னிலை பெற்றது. கேன் வில்லியம்சன் 104 ரன்கள் எடுத்தார்.தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்சில் 181 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து
7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், நஜ்மல் ஹொசைன் சாண்டோவின் (105) சதம் மூலம் 338 ரன்கள் சேர்த்தது. இந்த முறை நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அஜஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 332 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்து போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமை (டிசம்பர் 2) 181 ரன்களுக்கு சுருண்டது. தைஜூல் இஸ்லாம் இதில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இதன் மூலம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.