LOADING...
டி20 உலகக்கோப்பை 2026: அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது வங்கதேசம்; ஸ்காட்லாந்து அணி சேர்ப்பு
டி20 உலகக்கோப்பை 2026 இல் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது வங்கதேசம்

டி20 உலகக்கோப்பை 2026: அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது வங்கதேசம்; ஸ்காட்லாந்து அணி சேர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2026
06:31 pm

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேச கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர மறுத்த வங்கதேசத்தின் பிடிவாதத்தைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் மின்னஞ்சல் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு சனிக்கிழமை (ஜனவரி 24) அன்று அனுப்பப்பட்டது. வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பை தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது.

காரணங்கள்

ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டதற்கான காரணங்கள்

தகுதி பெறாத அணிகளில் ஸ்காட்லாந்து அணிதான் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. சமீபகாலமாக முழு நேர உறுப்பு நாடுகளுக்கு எதிராக ஸ்காட்லாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், கால அட்டவணையை மாற்றாமல் வங்கதேசத்தின் இடத்திற்கு ஸ்காட்லாந்தைச் சேர்ப்பது எளிதானது என ஐசிசி கருதியுள்ளது. ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் துபாயில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா வருவது குறித்து முடிவெடுக்க வங்கதேசத்திற்கு அளிக்கப்பட்ட 24 மணிநேர அவகாசம் முடிந்தும் அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பதில் அளிக்கவில்லை. ஐசிசிக்குத் தெரிவிக்கும் முன்பே, டாக்காவில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி இந்தியா வரமாட்டோம் என்று அறிவித்தது விதிமுறை மீறல் என ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்டவணை

ஸ்காட்லாந்து அணியின் புதிய அட்டவணை (குரூப்-சி)

வங்கதேசத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த அதே அட்டவணையில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி விளையாடும். கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறவுள்ள ஸ்காட்லாந்து அணியின் போட்டிகள் விவரம்: பிப்ரவரி 7: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக (கொல்கத்தா) பிப்ரவரி 9: இத்தாலிக்கு எதிராக (கொல்கத்தா) பிப்ரவரி 14: இங்கிலாந்திற்கு எதிராக (கொல்கத்தா) பிப்ரவரி 17: நேபாளத்திற்கு எதிராக (மும்பை)

Advertisement