
காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!
செய்தி முன்னோட்டம்
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதை அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை 2023 இல் தென்னாப்பிரிக்கா தனது இடத்தை உறுதி செய்துள்ளது.
அயர்லாந்து ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற, வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ஆனால் செவ்வாய்க்கிழமை (மே 9) நடக்கவிருந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், தானாகவே அயர்லாந்து வாய்ப்பை இழந்து, தென்னாப்பிரிக்கா தனது இடத்தை உறுதி செய்துவிட்டது.
வங்கதேசம் ஏற்கனவே ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
odi world cup qualified teams list
ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடி தகுதி பெற்ற அணிகள்
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் நாடு நேரடியாக தகுதி பெறும்.
அந்த வகையில், நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
மேலும் புள்ளிப்பட்டியலில் கடைசி ஐந்து இடங்களை பிடித்த அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகியவை அசோசியேஷன் நாடுகளான அமெரிக்கா, யுஏஇ, நேபாளம், ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துடன் தகுதி சுற்றில் விளையாடும்.
இந்த போட்டிகள் ஜூன் 18 முதல் ஜிம்பாப்வேவில் நடக்க உள்ளது. இதிலிருந்து இரண்டு அணிகள் தகுதி பெற்று உலகக்கோப்பையில் பங்கேற்கும்.