கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வங்கதேச அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்
வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் மிர்பூரில் நடைபெறும் சொந்த தொடரின் முடிவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற விருப்பம் தெரிவித்துள்ளார். கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, 37 வயதான ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வியாழனன்று தனது முடிவை அறிவித்தார். "புதிய வீரர்களை கொண்டு வர இதுவே சரியான நேரம். டி20 போட்டிகளுக்கும் இதே பார்வைதான். நான் தலைமை தேர்வாளர் மற்றும் பிசிபி தலைவருடன் பேசினேன்." என்று ஷாகிப் செய்தியாளர்களிடம் கூறினார்.
மிர்பூரில் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம்
டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை சொந்த நாட்டு ரசிகர்கள் முன் விளையாட விரும்புவதாக ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைய சூழலில் வங்கதேசம் சென்றால், அங்கு அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக் கூறப்படும் நிலையில், அங்கு விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஒரே வங்கதேச வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2025 சாம்பியன்ஸ் டிராபி அவரது கடைசி தொடராக இருக்கும்.