BANvsAFG: ஆஃப்கான் பவுலர்களைப் பந்தாடிய வங்கதேசத்தின் மெஹிடி ஹாசன் மற்றும் ஷான்டோ
ஆசிய கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது வங்கதேச அணி. வங்கதேச அணியின் சார்பாக முகமது நைம் மற்றும் மெஹிடி ஹாசன் மிராஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஒன்பது ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து 60 ரன்களைக் கடந்திருந்த நிலையில் முகமது நைம் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய ஹிரிதாயும் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். பின்னர், 11வது ஓவரில் கைகோர்த்த மெஹிடி ஹாசன் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ கூட்டணி, பொறுமையாக 45வது ஓவர் ஆட்டமிழக்காமல் விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.
சதமடித்த மிராஸ் மற்றும் ஷான்டோ கூட்டணி:
45 ஓவர்கள் வரை ஆடிய மிராஸ் மற்றும் ஷான்டோ கூட்டணியில் இருவருமே அடுத்தடுத்து சதம் கடந்து அசத்தினர். ஒரு நாள் போட்டிகளில் இது இருவருக்குமே இரண்டாவது சதமாகும். இறுதி ஐந்து ஓவர்களில் ஷான்டோ மற்றும் ரகிம் இருவருமே ரன் அவுட்டாக, கடைசி சில ஓவர்களில் சிறு கேமியோ ஆடி 32 ரன்களைக் குவித்தார் அணியின் கேப்டன் சஹிப் அல் ஹசன். வங்கதேச அணியின் பேட்டிங்குக்கு, ஆஃப்கன் பவுலர்கள் யாரிடமும் பதில் இல்லை. ஆஃப்கனின் முஜீப்-உர்-ரஹ்மான் மற்றும் குல்பதின் நைப் ஆகிய இரு பவுலர்கள் மட்டும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில், ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்களைக் குவித்திருக்கிறது வங்கதேசம். ஆஃப்கன் அணிக்கு 335 ரன்கள் இலக்கு.