கிரிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் 10 சதங்களை விளாசிய பாபர் அசாம்
இலங்கையில் நடைபெற்று வரும் 'லங்கா ப்ரீமியர் லீக்' டி20 கிரிக்கெட் தொடரில் கொலும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். நேற்று கேல் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 59 பந்துகளில் சதமடித்து அசத்தியிருக்கிறார் அவர். டி20 போட்டிகளில் தனக்கென தனி முத்திரை பதித்த பாபர் அசாமுக்கு, இது ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட 10வது சதமாகும். இந்த சதத்துடன் டி20 போட்டிகளில் 10 சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் கிரிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக 3 சதங்களை விளாசியிருக்கும் பாபர் அசாம், லீக் போட்டிகளில் இத்துடன் 7 சதங்களை அடித்திருக்கிறார்.
டி20 போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள்:
இதுவரை டி20 போட்டிகளில் அதிக சதங்களை விளாசியவர்கள் பட்டியலில் 22 சதங்களுடன் முதலிடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் கிரிஸ் கெயில். அவரைத் தொடர்ந்து, 10 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இடத்தில் இருக்கிறார் பாபர் அசாம். இந்திய வீரரான விராட் கோலி, 8 டி20 சதங்களுடன், ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் மற்றும் மைக்கேல் கிளிங்கர் ஆகியோருடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதேபோல், டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 110 அரைசதங்களுடன் கிரிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, 107 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்திலும், 99 அரைசதங்களுடன் விராட் கோலி மூன்றாமிடத்திலும் இருக்கின்றனர். 87 அரைசதங்களுடன் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார் பாபர் அசாம்.