டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்
ஹோபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் 41 ரன்களில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். பாபர் அசாம் 41 ரன்களை எடுத்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மற்ற வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 19வது ஓவரில் அந்த அணி 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில், இந்த 41 ரன்கள் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலியை விஞ்சினார். பாபர் அசாம் தற்போது 119 இன்னிங்ஸ்களில் 4,192 ரன்களுடன் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் 36 அரைசதங்கள் மற்றும் 3 சதங்களுடன் 129.22 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார்.
பட்டியலில் முதலிடத்தில் ரோஹித் ஷர்மா
இந்த போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமுக்கு விராட் கோலியை விஞ்ச 38 ரன்கள் தேவைப்பட்டது. இதில் அவர் 41 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், ரோஹித் ஷர்மா 4,192 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை விஞ்சுவதற்கு பாபர் அசாமிற்கு இன்னும் 40 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது மூன்றாவது இடத்தில் விராட் கோலி உள்ள நிலையில், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 3,655 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். அவர்களைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர் மற்றும் முகமது ரிஸ்வான் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோற்று, பாகிஸ்தான் ஒயிட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது.