AUSvsSA : தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் சதமடித்து 109 ரன்கள் எடுத்த நிலையில், ஐடென் மார்க்ரம் 56 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
312 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் மார்னஸ் லாபுசாக்னேவை தவிர மற்ற வீரர்கள் யாரும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். மார்னஸ் லாபுசாக்னேவும் அணியில் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்த ஆஸ்திரேலியா 40.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்காவில் காகிஸோ ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.