26 வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர்; பின்னணி என்ன?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் வில் புகோவ்ஸ்கியின் கிரிக்கெட் வாழ்க்கை மருத்துவ காரணங்களால் முடிவுக்கு வந்துள்ளது. 26 வயதே ஆன வீரர் மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையை பின்பற்றி ஓய்வு பெற உள்ளார். புகோவ்ஸ்கி தலையில் பல காயங்களுக்கு ஆளான பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட மூளையதிர்ச்சி அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு புகோவ்ஸ்கியை ஓய்வு பெறுமாறு ஒரு சுயாதீன நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து விக்டோரியா மாகாண கிரிக்கெட் சங்கம் அவரது குழுவினருடன் இணைந்து அவரது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த உள்ளது.
வில் புகோவ்ஸ்கியின் சுருக்கமான கிரிக்கெட் வாழ்க்கை
புகோவ்ஸ்கி 21 வயதை எட்டுவதற்கு முன்பு ஜனவரி 2019இல் அந்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார். டேவிட் வார்னருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக 62 மற்றும் 10 ரன்களை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். அவர் விளையாடிய ஒரே சர்வதேச போட்டி இதுமட்டுமேயாகும். இதற்கிடையே, இந்தப்போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் அவரை சுமார் ஆறு மாதங்கள் ஓய்வெடுக்க வைத்து, அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மேலும் சீர்குலைத்தது. ஒட்டுமொத்தமாக, புகோவ்ஸ்கி 36 முதல்தர போட்டிகளில் 2,350 ரன்கள் எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 333 ரன்களையும் எடுத்துள்ளார். புகோவ்ஸ்கியின் சகநாட்டவரான பிலிப் ஹியூஸ் இதேபோன்ற காயத்தால் 25 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.