11 ஆண்டுகளில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி
மான்செஸ்டரில் நடைபெறும் ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) அறிவித்துள்ளது. முன்னதாக, ஹெடிங்லியில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில், இந்த முறை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஸ்காட் போலண்ட் மற்றும் டோட் மர்பி விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களமிறங்க உள்ளார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மேலும், இதன் மூலம் 2012க்கு பிறகு, 11 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முழு சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய விளையாடும் லெவன் பட்டியல்
நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி அதிகபட்ச பேட்டர்களுடன் களமிறங்க உள்ளது. அணியில் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ள ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய பட்டியலிடப்பட்டுள்ளார். இதனால் விக்கெட் கீப்பர் பேட்டர் அலெக்ஸ் கேரி எட்டாவது இடத்தில் பேட் செய்ய வைக்கப்படுவார் எனத் தெரிகிறது. அவரைத் தொடர்ந்து பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் களமிறங்குவார்கள். ஆஸ்திரேலியா விளையாடும் லெவன்: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட்.