ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் தேர்வு
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஜூலை 2024க்கான ஆடவர் ஐசிசி சிறந்த வீரர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இது, தற்செயலாக ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிரியாவிடை ஆட்டமும்கூட என்பது குறிப்பிடத்தக்கது. ஒல்லி ராபின்சன் தேர்வாளர்களின் ஆதரவை இழந்த பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இங்கிலாந்தின் சொந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டார். அதில் அட்கிசன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 7 மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
சிறந்த வீராங்கனையாக இலங்கையின் சாமரி அத்தபத்து தேர்வு
ஆடவர் பிரிவில் அட்கின்சன் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இலங்கையின் சாமரி அத்தபத்து சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகளிர் டி20 ஆசிய கோப்பை பட்டத்தை இலங்கை கிரிக்கெட் அணி வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அதபத்து ஒரு சதம் உட்பட 101.33 சராசரியில் இந்த தொடரில் 304 ரன்கள் எடுத்து முன்னிலை வகித்தார். இந்த விருதை வென்றதன் மூலம் சாமரி அத்தபத்து மூன்றாவது முறையாக சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளார். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெய்லி மேத்யூஸ் மட்டுமே அதிகபட்சமாக மூன்று முறை வென்றிருந்த நிலையில், அதை சாமரி அத்தபத்து சமன் செய்துள்ளார்.