விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை!
செவ்வாய்கிழமை (மே30) ஹரித்வாருக்கு வந்த மல்யுத்த வீரர்கள் பாரதிய கிசான் யூனியன் மற்றும் விவசாயத் தலைவரான நரேஷ் திகைத்தின் தலையீட்டிற்குப் பிறகு, தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசாமல் திரும்பினர். மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை ஆற்றில் விடுவதற்காக ஹரித்வாரை அடைந்த நிலையில் திகைத் அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு 5 நாள் கெடு விதித்தார். மத்திய அரசு ஒருவரைக் காப்பாற்றுகிறது என்று பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் குறிப்பிட்டு, புதன்கிழமை இது தொடர்பாக விவாதிக்க காப் பஞ்சாயத்து கூட்டம் நடைபெறும் என்று திகைத் கூறினார். முன்னதாக, மல்யுத்த வீரர்கள் மே 28 அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தபோது போராட்ட தளத்தில் இருந்து அகற்றப்பட்டனர்.
உலக மல்யுத்த சங்கம் கண்டிப்பு
டெல்லியில் நடக்கும் களேபரங்களுக்கு மத்தியில் உலக மல்யுத்த சங்கம் செவ்வாயன்று ஜந்தர் மந்தரில் இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்தத் தவறினால் இந்திய மல்யுத்த சம்மேளனத்த்தை இடைநீக்கம் செய்வதாக எச்சரித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக சம்யுக்த கிசான் மோர்ச்சா எனும் விவசாய கூட்டமைப்பும் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.