Loading...
ஆசிய விளையாட்டு 2026: மகளிர் 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம்
ஆசிய விளையாட்டில் மகளிர் 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு 2026: மகளிர் 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம்

எழுதியவர் Vasuki
Sep 29, 2026
11:39 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளப் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட அணி உறுதி செய்துள்ளது. கிரண் பஹால், மச்செட்டிரா பூவம்மா, பிராச்சி மற்றும் வித்யா ராம்ராஜ் அடங்கிய இந்திய வீராங்கனைகள் குழு, பந்தய தூரத்தை 3:29.69 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்தது. பஹ்ரைன் அணி 3:30.21 நிமிடங்களில் வெள்ளியையும், சீனா 3:31.02 நிமிடங்களில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. 1994 ஹிரோஷிமா ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு தடகளத்தில் தங்கம் இல்லாமல் இந்தியா திரும்புமோ என்ற அச்சம் நிலவிய சூழலில், மகளிர் தொடர் ஓட்ட அணியினர் இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

சாதனை

வித்யா ராம்ராஜின் ஹாட்ரிக் சாதனை

தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கிய கிரண் பஹால் 3-வது இடத்தில் பேட்டனைக் கொடுக்க, பூவம்மா தனது அபார ஓட்டத்தால் இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து பிராச்சி முன்னிலையைத் தக்கவைக்க, இறுதிக் கட்டத்தில் பேட்டனை வாங்கிய வித்யா ராம்ராஜ், பஹ்ரைனின் சல்வா ஈத் நசரின் சவாலை முறியடித்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

முன்னதாக கலப்பு 4x400 தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலமும் வென்றிருந்த வித்யா ராம்ராஜுக்கு நடப்பு தொடரில் 3-வது பதக்கமாகும்.

குறிப்பாக 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அவர் பதிவு செய்த 54.75 வினாடிகள், கடந்த 42 ஆண்டுகளாக நீடித்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையை (55.42 வினாடிகள்) முறியடித்த பெருமையையும் பெற்றுத் தந்தது.

பதக்கம்

தடகளக் களத்தில் இந்தியாவின் பதக்கம்

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து பல பதக்கங்களை வென்று அசத்தியது.

மகளிர் உயரம் தாண்டுதலில் பூஜாவும், ஆடவர் 5000 மீட்டர் ஓட்டத்தில் 13:32.75 நிமிடங்களில் இலக்கைத் தொட்டு குல்வீர் சிங்கும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ஏற்கனவே 10,000 மீ மற்றும் 1500 மீ போட்டிகளில் வெள்ளி வென்றிருந்த குல்வீர் சிங், இதன் மூலம் மூன்று பதக்கங்களை முழுமை செய்தார்.

மேலும் கலப்பு 4x100 தொடர் ஓட்டம் மற்றும் ஆடவர் 4x400 தொடர் ஓட்டத்தில் தர்மவீர் சவுத்ரி, மனு தெக்கினலில், ஜெய்குமார், விஷால் தென்னரசு அடங்கிய இந்திய அணி வெண்கலம் கைப்பற்றியது.

மகளிர் ஹேமர் த்ரோவில் தான்யா சவுத்ரி 4-வது இடத்தையும், அனுஷ்கா யாதவ் 5-வது இடத்தையும் பிடித்தனர்.

ADVERTISEMENT