'சூப்பர் 4'க்கு முன்னேறியிருக்கும் ஆசிய கோப்பைத் தொடர், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது குழு சுற்றுப் போட்டிகளைக் கடந்து அடுத்த நிலையான சூப்பர் 4 சுற்றை அடைந்திருக்கிறது. குழு சுற்றுப் போட்டிகளில் பங்கேற்ற ஆறு அணிகளில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்து ஆசிய கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியிருக்கின்றன. நேற்று நடைபெற்ற குழு சுற்றுக் கடைசி போட்டியில் மயிரிழையில் ஆஃப்கனை தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது இலங்கை. குழு சுற்றைக் கடந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.
ஆசிய கோப்பை சூப்பர் 4:
இந்த சூப்பர் 4 சுற்றில், மேற்கூறிய நான்கு அணிகளும் பிற மூன்று அணிகளுடன் ஒரு முறை மோதவிருக்கின்றன. சூப்பர் 4 சுற்றில் 6 போட்டிகள் விளையாடப்படவிருக்கின்றன. இந்த ஆறு போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் மோதவிருக்கின்றன. சூப்பர் 4 சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களில் இரு அணிகள் ஒரே அளவு புள்ளிகளைப் பெறும் பட்சத்தில், நெட் ரன் ரேட் அடிப்படையில் இறுதி போட்டிக்கான அணிகள் முடிவு செய்யப்படும். இந்தப் போட்டிகளில் மழையும் பெரும்பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து அணிகளும் தொடக்கத்திலிருந்தே நெட் ரன் ரேட்டும் குறையாகமல் பார்த்துக் கொள்ளத் திட்டமிட்டே விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருக்கும் எல்லைப் பிரச்சினை காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள், இரு நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதில்லை. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை உள்ளிட்ட பலநாட்டு சர்வதேச ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு நாடுகளும் மோதிக் கொள்கின்றன. ஆசிய கோப்பைத் தொடரில் இவ்விரண்டு அணிகளும் மோதிக் கொண்ட முதல் போட்டியானது மழையால் ரத்தானது, இதனால் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், 1984ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடர்களில், இதுவரை ஒரு முறை கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிபோட்டியில் மோதிக் கொண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.