ஆசிய கோப்பை இறுதிப் போட்டிகளில் INDvsSL நேருக்கு நேர் புள்ளிவிபரம்
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) கொழும்பு ஆர் பிரேமதேசா மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஒரு பெரிய கோப்பைக்கான 5 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவர இந்திய கிரிக்கெட் அணி விரும்புகிறது. ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் கடைசி பெரிய பட்டம் 2018 இல் வந்தது. துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிருந்தது. ஆசிய கோப்பையை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக இதில் இந்தியாவும் இலங்கையும்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 7 முறை பட்டங்களை கைப்பற்றி மிகவும் வெற்றிகரமான அணியாக இந்தியா உள்ள நிலையில், 6 பட்டங்களுடன் இலங்கை அடுத்த இடத்தில் உள்ளது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா vs இலங்கை புள்ளிவிபரம்
39 ஆண்டுகால போட்டி வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் சந்தித்ததில்லை என்றாலும், இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இந்தியா 4 முறையும், இலங்கை 3 முறையும் வென்றுள்ளன. இந்தியாவும் இலங்கையும் கடைசியாக 2010இல் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதின. தம்புல்லாவில் நடந்த அந்த போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா. அதில் பங்கேற்ற ரவீந்திர ஜடேஜா, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 3 வீரர்கள் 2023 இறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளார்கள்.