ஆசிய கோப்பை INDvsPAK சூப்பர் 4 : இரட்டை சாதனைகளுக்கு தயாராகும் ரவீந்திர ஜடேஜா
ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய மைல்கற்களை எட்டும் முனைப்பில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சூப்பர் 4 போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) இலங்கையின் கொழும்புவில் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பையில், இந்தியாவின் முதல் சூப்பர் 4 போட்டியும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜாவை பொறுத்தவரை லீக் சுற்றில் கடைசியாக நடந்த நேபாளத்திற்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதன்மூலம், தற்போதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 179 ஒருநாள் போட்டிகளில் 4.90 எகானமியில் 197 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்னை கடந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேலும் மூன்று விக்கெட்டுகளை எடுத்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எட்டிய ஏழாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெறுவார். மேலும், ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளேக்கு பிறகு, 50 ஓவர் வடிவத்தில் 200 விக்கெட் எடுத்த மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் ஆவார். மேலும், ஒருநாள் வடிவ ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியர்கள் பட்டியலில் 22 விக்கெட்டுகளுடன் இர்பான் பதானுடன் சமநிலையில் உள்ள ஜடேஜா, இதில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனை படைப்பார். இந்த பட்டியல் சச்சின் டெண்டுல்கர் 17 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.