ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை இவ்ளோதானா!
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடந்த இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதன் மூலம் ஆசிய கோப்பை 2023 ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு மொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் 2.97 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வழங்குகிறது. போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி மட்டுமல்லாது, இரண்டாம் இடம் பிடித்த இலங்கை மற்றும் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடம் பிடித்த அணிகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் நேபாளம் தவிர மற்ற அனைத்து அணிகளும் பரிசுத் தொகையை பெற உள்ளன. மேலும் ஆட்ட நாயகன் விருது வெல்லும் வீரருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது.
பரிசுத் தொகை முழு விபரம்
ஆசிய கோப்பை 2023 போட்டியில் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.25 கோடி வழங்கப்படுகிறது. இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூ. 51 லட்சம், வங்கதேசத்திற்கு ரூ. 25 லட்சம் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. ஐபிஎல்லுடன் ஒப்பிடும்போது இந்த பரிசுத் தொகை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.