இந்தியாவின் டி20 தோல்வி குறித்து தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்ட அஸ்வின் ரவிச்சந்திரன்
செய்தி முன்னோட்டம்
கடந்த இரண்டு மாதங்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியது இந்திய அணி.
முதலில் ஆடிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இறுதியாக ஆடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடைரில் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது இந்தியா.
இந்தத் தொடரின் தோல்விக்குப் பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, "ஒரு தொடரில் தோல்வியைத் தழுவியது பெரிய விஷயம் அல்ல. நம்முடைய இலக்கு தான் முக்கியம்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கின்றன. எனவே இந்த டி20 தொடரின் தோல்விலேயே மூழ்கியிருக்க வேண்டியதில்லை" எனப் பேசியிருந்தார்.
கிரிக்கெட்
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் கருத்து:
இந்த டி20 தொடர் குறித்தும், அதன் தோல்வி குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின் ரவிச்சந்திரன், "அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு நீண்ட நாட்கள் இருப்பதாகக் கூறுவதை நான் ஏற்கவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "நான் இங்கே யாருக்கும் ஆதரவாகப் பேசவில்லை. ஆனால், ஒரு இளம் வீரராகப் பிற நாடுகளில் விளையாடுவது சற்றுக் கடினம். ஒரு நாட்டில் இருக்கும் சில சூட்சமங்கள் அந்நாட்டு வீரர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்." எனத் தெரிவித்திருக்கிறார்.
இத்துடன், எம்.எஸ்.தோனியும், சில பயிற்சியாளர்களும் தன்னிடம் கூறியதாக ஒரு விஷயத்தையும் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதாவது, "தோல்வியில் இருந்து நாம் நிறைய பாடம் கற்றுக் கொள்வோம். ஆனால், வெற்றிகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவரே முதன்மையானவர் ஆகிறார்கள்" என்றார்.