இம்பாக்ட் பிளேயர் விதி தேவைதான்: IPL நெருங்கும் நேரத்தில் அஸ்வின் கூறுவது என்ன?
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தன்னுடைய யூடூயுப் சேனலில் கிரிக்கெட் சார்ந்த பல விஷயங்களை பற்றி விவாதித்தும், தன்னுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் அனிருத் உடன் உரையாடினார். அப்போது, இம்பேக்ட் பிளேயர் விதி பற்றியும், ஆல் டைம் ஐபிஎல் பிளேயிங் லெவனில் யார் இருப்பார்கள் போன்றவற்றை பற்றி பேசப்பட்டது. அதற்கு அஸ்வின்,"இம்பேக்ட் பிளேயர் விதி என்பது தேவையானது என்றே நினைக்கிறேன். இம்பேக்ட் பிளேயர் விதியால் கூடுதலாக இந்திய வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்" எனத்தெரிவித்துள்ளார்.
RTM குறித்து அஸ்வின் கருத்து
'ஹாக்கி, கால்பந்து, கூடைப்பந்து என்று ஏராளமான விளையாட்டுகளில் சப்ஸ்ட்டிடியூட் இருப்பது போல், கிரிக்கெட்டிலும் இருப்பதில் தவறில்லை. அதேபோல் ஆர்டிஎம் என்ற வாய்ப்பை எந்த அணிக்கும் ஐபிஎல் நிர்வாகம் அளிக்கக்கூடாது' என்று நினைப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். 'ஏனென்றால் ஒரு வீரரை தேவையில்லை என்று ஏலத்திற்கு அந்த அணி நிர்வாகம் அனுப்பிவிட்டது. அதன்பின் அவரை வாங்க இரு அணிகள் போட்டியிட்டு, இறுதியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் போது, ஆர்டிஎம் கார்டை காட்டி அதே தொகைக்கு வாங்குவது சரியல்ல' என்றார். அஸ்வினின் இந்த கருத்தை இந்திய முன்னாள் வீரர் கிரிஷ் ஸ்ரீகாந்தும் ஆமோதித்தார்.
ஆல் டைம் ஐபிஎல் பிளேயிங் லெவன் பற்றி அஸ்வினின் கணிப்பு
ஆல் டைம் பிளேயிங் லெவெனில் யார் இருப்பார்கள் என அஸ்வினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 5 முறை கோப்பை வென்ற இரு கேப்டன்களான MS தோனி, ரோஹித் சர்மா ஆகிய இருவரை சுற்றியே அணியை கட்டமைப்பேன் என்றார். கூடவே, 3வது வீரராக பும்ரா நிச்சயம் இடம்பெறுவார் என்றார். இதில் தொடக்க வீரர்களாக ரோஹித், கோலி, நம்பர் 3ல் ரெய்னா, 4ல் SKY, 5ல் டி வில்லியர்ஸ், 6ல் தோனி என்று பேட்டிங்கை கட்டமைப்பேன் எனவும் வரிசைப்படுத்தினார். 7வது வீரராக ரஷித் கான், நம்பர் 8ல் சுனில் நரைன், நம்பர் 9ல் புவனேஷ்வர் குமார், நம்பர் 10ல் லசித் மலிங்கா மற்றும் நம்பர் 11ல் பும்ரா ஆகியோர் தனது அணியில் இடம்பெற்றிருப்பார்கள் என்று தெரிவித்தார்.