ஆஷஸ் 2023 : 18 ஆண்டு கால ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து
ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதிநாளை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்காவது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களுடன் உள்ள நிலையில், வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவையாகும். ஒரு நாள் மீதமுள்ள நிலையில், இது எட்டக்கூடிய இலக்கு தான் என்பதால், ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முன்னதாக, போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 393 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. மேலும் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு சுருட்டியது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு பின்னடைவு
7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 281 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது. இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில், அணியின் எந்தவொரு வீரரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. இதன் மூலம் ஆஷஸ் வரலாற்றில் அணியின் எந்தவொரு வீரரும் அரைசதம் அடிக்காமல் ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஸ்கோராக இங்கிலாந்து அணியின் 281 ரன்கள் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பாக 2005 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் 279 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்த நிலையில் 18 ஆண்டுகளா ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடித்துள்ளது.