ஆஷஸ் 2023 : 131 ஆண்டுகால சாதனையை முறியடித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
ஆஷஸ் 2023 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்று, தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 251 ரன் இலக்கை, ஹாரி புரூக் 75 ரன்கள் எடுத்ததன் மூலம், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி வீழ்த்தியது. மேலும், இதன் மூலம் 1892 ஆம் ஆண்டின் 131 ஆண்டுகள் பழமையான சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது முறியடித்துள்ளது. அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு இங்கிலாந்து வென்றது இது இரண்டாவது நிகழ்வு மட்டுமே.
1892 ஆஷஸ் தொடரில் நடந்தது என்ன?
கடைசியாக, 1892ல் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது. அதற்கு பிறகு நடந்த மூன்றாவது போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 230 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்து 499 ரன்கள் எடுத்தது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா இரு இன்னிங்ஸ்களில் முறையே 100 மற்றும் 169 ரன்களில் சுருண்டது. குறிப்பிடத்தக்க வகையில், தற்போதைய 2023 தொடருக்கு முன், இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் 19 முறை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தாலும், இதற்கு முன்னதாக, 1892ல் மட்டுமே மூன்றாவது போட்டியில் வென்றது.