
அப்பா சச்சினை போலவே மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இளம் வயதிலேயே திருமணமா?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் ஐகானும், "மாஸ்டர் பிளாஸ்டருமான" சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இளம் வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 25 வயதான அர்ஜுன், கடந்த வாரம் மும்பை தொழிலதிபர் ரவி கையின் பேத்தி சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் என்று பல ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த விழா, மிக நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வாக நடைபெற்றுள்ளது என இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது. எனினும் இது குறித்து, இரண்டு குடும்பங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை
மணமகள்
சச்சின் வீட்டு மருமகளாகவிருக்கும் சானியா யார்?
சானியா சந்தோக், 'Mr. Paws பெட் ஸ்பா & ஸ்டோர்' என்ற செல்லப்பிராணி நல நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆவார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்து பட்டம் பெற்ற அவர், 2024-ல் கால்நடை நலத்துறையில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார். சானியா, உணவுத் தொழில் மற்றும் ஹோட்டல் துறையில் பெரும் ஆதிக்கம் கொண்ட'காய்' குடும்பத்தை சேர்ந்தவர். இந்தக் குடும்பம், புரூக்ளின் க்ரீமரி, குவாலிட்டி ஐஸ்கிரீம் மற்றும் இன்டர் கான்டினென்டல் ஹோட்டல்போன்ற பிராண்டுகளை நிர்வகிக்கிறது. சானியா, அர்ஜுனின் சகோதரி சாரா டெண்டுல்கருடன் நெருங்கிய தோழியாகவும் அறியப்படுகிறார். சமீபத்தில் ஜெய்ப்பூரில் இருவரும் எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்
அர்ஜுனின் கிரிக்கெட் பயணம்
இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன், தற்போது கோவா மாநில அணிக்காகவும், ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கடந்த 2023 மற்றும் 2024 சீசன்களில் ஐபிஎல் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அர்ஜுனின் நிச்சயதார்த்தம் செய்திருப்பது அவரது தந்தை சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது. 19 வயதில், சச்சின், அஞ்சலியிடம் திருமணத்திற்கு ப்ரொபோஸ் செய்தார். பின்னர், 1995-ல் 22 வயதில் திருமணம் செய்துகொண்டார். இப்போது மகனும் அதே பாதையில் செல்கிறார் என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.