
வங்கதேசத் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் வெள்ளிக்கிழமை (மே 23), வங்கதேசத்திற்கு எதிரான வரவிருக்கும் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதன் மூலம், 2009 இல் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸின் டெஸ்ட் சகாப்தம் முடிவிற்கு வருகிறது.
37 வயதான அவர் ஜூன் 17 முதல் 21 வரை காலேயில் தனது கடைசி டெஸ்டில் விளையாடுவார்.
அதே நேரம், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என ஒயிட் பால் வடிவ கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளார்.
எக்ஸ்
எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு
தனது டெஸ்ட் ஓய்வு குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு இதயப்பூர்வமான பதிவில், "நன்றியுள்ள இதயத்துடனும் மறக்க முடியாத நினைவுகளுடனும்... விளையாட்டின் மிகவும் நேசத்துக்குரிய வடிவத்திற்கு விடைபெற வேண்டிய நேரம் இது" என்று கூறினார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இளைய வீரர்களுக்கு வழிவிட இதுவே சரியான நேரம் என்று அவர் கூறினார்.
இலங்கையின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக மேத்யூஸ் ஓய்வு பெறுகிறார், 118 போட்டிகளில் 44.62 சராசரியில் 8,167 ரன்கள் குவித்துள்ளார்.
அவரது சாதனை எண்ணிக்கையில் 16 சதங்களும், ஆட்டமிழக்காமல் எடுத்த 200 ரன்களும் அடங்கும். அவர் பந்து வீச்சிலும் பங்களித்து 34 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மூன்றாவது இடம்
ரன் குவிப்பில் மூன்றாவது இடம்
இலங்கையின் டெஸ்ட் வரலாற்றில் அவரது ரன் எண்ணிக்கை ஜாம்பவான்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தனே ஆகியோருக்குப் பின்னால் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேத்யூஸின் 17 ஆண்டுகால சேவை மற்றும் தலைமைத்துவத்தைப் பாராட்டி, இலங்கை கிரிக்கெட் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
அவரது அர்ப்பணிப்பு ஒரு தலைமுறைக்கு உத்வேகம் அளித்துள்ளது என்று தனது அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வீரராக மட்டும் இல்லாமல், 2013 முதல் 2017 வரை அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக இலங்கை கிரிக்கெட் அணியை வழிநடத்திய மேத்யூஸ், தனது வாழ்க்கை முழுவதும் அவரது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.