பாக்சிங் டே மோதலுக்கு தயாராகும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள்; மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணியின் புள்ளிவிபரம் என்ன?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 ஒரு முக்கிய தருணத்தை எட்டுகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டுக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என சமநிலையில் உள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, மூத்த ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால், இந்தியா குறிப்பிடத்தக்க பின்னடைவை எதிர்கொள்கிறது. இருப்பினும், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னேறி, அஸ்வினுக்குப் பதிலாக அணி தனது சுழல் வலிமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதான புள்ளிவிபரம்
மெல்போர்ன் கிரிக்கெட் மைதான ஆடுகளம், நான்காவது நாளுக்குள் மோசமடைந்தது, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுவதால், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கிடையே, புள்ளிவிபர அடிப்படையில், மெல்போர்ன் மைதானம் இந்தியாவுக்கு பெரும்பாலும் சாதகமாக இருந்ததில்லை. டொனால்ட் பிராட்மேனின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1948 இல் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதில் இருந்து, இந்திய கிரிக்கெட் அணி 14 போட்டிகளில் இங்கு விளையாடியுள்ளது. இதில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், எட்டு தோல்விகள் மற்றும் இரண்டு டிராக்களைப் பெற்றுள்ளது. அவர்களின் முதல் வெற்றி 1978 இல் பிஷன் சிங் பேடியின் தலைமையில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.