35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆடவர் ஆசிய கோப்பையின் அடுத்த நான்கு சீசன்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை (அக்டோபர் 5) ஏசிசி வெளியிட்ட 2024-2031 சுழற்சியின் ஊடக உரிமைகளுக்கான அழைப்புகளை வெளியிட்டதன் மூலம் இது தெரியவந்துள்ளது. கிரிக்பஸ்ஸில் இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, ஏசிசி 170 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊடக உரிமைகளுக்கான அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளது. இது ஒவ்வொரு ஆறு ஏசிசி போட்டிகளின் உலகளாவிய தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகளை உள்ளடக்கும். இந்த ஆறு போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் ஆசிய கோப்பை, ஆடவர் மற்றும் மகளிர் யு-19 ஆசிய கோப்பை, ஆடவர் மற்றும் மகளிர் வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பை இடம்பெறும்.
இந்தியாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் நடக்க உள்ள ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்த உள்ளது. இதன் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் மீண்டும் இந்தியாவிற்கு திரும்புகிறது. இந்தியா இதற்கு முன்பு, 1990/91இல் ஆடவர் ஆசியக் கோப்பையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 2025 ஆசிய கோப்பை முழுவதும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விளையாடப்பட உள்ளது. வங்கதேசம் 2027இல் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசிய கோப்பையை நடத்த உள்ளது. இதேபோல், 2029இல் பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் வடிவத்திலும், 2031இல் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலும் போட்டியை நடத்த உள்ளது.