பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வெற்றி : வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்
ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஷார்ஜாவில் நடக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தானின் வலுவான பந்துவீச்சால் பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 92 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அனுபவமில்லாத பல இளம் வீரர்களை இந்த போட்டியில் பயன்படுத்தியது தான் குறைந்த ஸ்கோருக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பந்துவீசிய 6 பேருமே குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
போராடி வென்ற ஆப்கானிஸ்தான்
மிகவும் எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், ஒரு கட்டத்தில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாகிஸ்தானின் அறிமுக வீரர் இஹ்சானுல்லா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் இமாட் வாசிம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இருப்பினும், அடுத்து ஜோடி சேர்ந்த முகமது நபி மற்றும் நஜிபுல்லா சத்ரான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆப்கானுக்கு வெற்றியை பெற்று கொடுத்தனர். முகமது நபி 38 ரன்களையும், நஜிபுல்லா சத்ரான் 17 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் தனது முதல் வரலாற்று வெற்றியை பதிவு செய்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.