வீரர்களுக்கு ஐபிஎல்லில் பங்கேற்க தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரின் 2024 மத்திய ஒப்பந்தங்களை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆப்கான் கிரிக்கெட் வாரியம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக கூறியுள்ளது. இதனால், ஐபிஎல் 2024 தொடரில் அந்த மூன்று வீரர்களும் விளையாடுவது கேள்விக்குறி ஆகியுள்ளது.
ஐபிஎல் 2024இல் பங்கேற்பார்களா?
மேலே குறிப்பிடப்பட்ட வீரர்களில், முஜீப் உர் ரஹ்மான் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024க்கான மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். தற்போது நடந்து வரும் பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியில் அவர் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், நவீன் உல் ஹக் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி முறையே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளால் தக்கவைக்கப்பட்டு உள்ளனர். ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதல் கொடுக்க மறுத்திருந்தாலும், இந்த விவகாரத்தில் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சரிசெய்யப்படும் எனத் தெரிகிறது.