இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனம் நியமனம்!
விளையாட்டு ஆடைகள் மற்றும் உபகரண விற்பனை பிராண்டான அடிடாஸ் இந்திய கிரிக்கெட் அணியின் கிட்டை ஸ்பான்சர் செய்ய உள்ளது. பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரியின் கூற்றுப்படி, அடிடாஸ் ஒப்பந்தத்தை கைப்பற்றி விட்டதாகவும், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்பான்சராக இருக்கும் என கூறியுள்ளார். முன்னதாக ஆடை தயாரிப்பு நிறுவனமான கில்லர் இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக தற்போது இருந்து வருகிறது. இதன் மூலம் பிசிசிஐ ஒரு சிறந்த விளையாட்டு ஆடை பிராண்டை மீண்டும் அணியின் கிட் ஸ்பான்சராக கொண்டு வருகிறது.
கிட் ஸ்பான்சர் மாற்றத்தின் பின்னணி
2016 முதல் 2020 வரை இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக நைக் நிறுவனம் இருந்தது. இதற்காக நைக் பிசிசிஐக்கு ரூ.370 கோடி வழங்கியிருந்தது. இந்த ஒப்பந்தம் 2020இல் முடிவுக்கு வந்த நிலையில், எம்பிஎல் எனும் ஆன்லைன் கேமிங் நிறுவனம் மூன்று ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. எம்பிஎல் நிறுவனம் ஒரு போட்டிக்கு ரூ.65 லட்சம் மற்றும் ராயல்டியாக ரூ.9 கோடி வழங்கி வந்தது. இதன் ஒப்பந்தம் 2023 டிசம்பர் வரை இருந்தாலும், சமீபத்தில் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. இதையடுத்து தற்காலிக ஏற்பாடாக கில்லர் ஜீன்ஸ் நிறுவனம் மே 2023 வரை கிட் ஸ்பான்சராக இருக்க ஒப்பந்தம் மேற்கொண்டது. கில்லர் ஜீன்ஸின் ஒப்பந்தம் முடிந்த பிறகு, அடிடாஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது.