Loading...
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு: பிசிசிஐ தேர்வுக்குழுவை சாடிய ஆகாஷ் சோப்ரா
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுவதை ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு: பிசிசிஐ தேர்வுக்குழுவை சாடிய ஆகாஷ் சோப்ரா

எழுதியவர் Vasuki
Oct 18, 2026
05:45 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து, இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பிசிசிஐ தேர்வுக்குழுவை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சாம்சனின் பேட்டிங் சராசரி 56-க்கும் அதிகமாக இருக்கும் நிலையிலும், மூத்த விக்கெட் கீப்பர்கள் இல்லாத தொடரில் கூட அவருக்கு வாய்ப்பளிக்காதது தேர்வுக்குழுவின் தவறான மனநிலையைக் காட்டுகிறது என்று சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா

ஒருநாள் சராசரியும் தேர்வுக்குழுவின் முடிவும்

சஞ்சு சாம்சனின் புறக்கணிப்பு குறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா, "கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல் போன்ற விக்கெட் கீப்பர்கள் அணியில் இல்லாத சூழலிலும் கூட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை".

"இஷான் கிஷன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர் குமார் குஷாக்ரா அணியில் சேர்க்கப்படுகிறார்.

குஷாக்ராவின் உள்நாட்டு ஆட்டம் சிறப்பாக இருக்கலாம், ஆனால் சஞ்சு சாம்சன் என்ன பாவம் செய்தார்? கடைசியாக ஆடிய போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்தவர் அவர்".

"14 இன்னிங்ஸ்களில் 56.67 சராசரியுடன் 510 ரன்கள் குவித்துள்ள ஒரு வீரரைத் தொடர்ந்து ஒதுக்கி வைப்பது, ஒருநாள் கிரிக்கெட்டில் சாம்சனின் எதிர்காலம் குறித்துத் தேர்வுக்குழு ஏற்கனவே ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டதையே காட்டுகிறது" என்று குற்றம்சாட்டினார்.

புள்ளிவிவரம்

டி20 ரன் வேட்டையும் தொடரும் அழுத்தமும்

கடந்த 20 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களின் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பேசிய ஆகாஷ் சோப்ரா, தரவரிசையில் முதலிடங்களிலுள்ள இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மாவை விட சஞ்சு சாம்சனே அதிக ரன்களைக் குவித்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

20 இன்னிங்ஸ்களில் 183.51 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 657 ரன்களை விளாசியுள்ள சாம்சன், அழுத்தத்திற்கே ஆயுள் சந்தா எடுத்தவர் போலத் தேவையின்றித் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் 193 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 168 ரன்கள் குவித்துத் தனது திறமையை நிரூபித்துள்ள சாம்சனின் புள்ளிவிவரங்களுக்குத் தேர்வுக்குழு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் சோப்ரா வலியுறுத்தினார்.

ADVERTISEMENT