SA vs NED: தென்னாப்பிரிக்காவிற்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்த நெதர்லாந்து!
ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. மழையின் காரணமாக இன்றைய போட்டிக்கான டாஸ் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து நீடித்த மழையின் காரணமாக இன்றைய போட்டிக்கான ஓவர்கள் 50-ல் இருந்து 43 ஆகக் குறைக்கப்பட்டன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்ப பவுமா, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அணியின் சார்பில் விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ டவுடு ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களகாகக் களமிறங்கினர். தரவரிசைப் பட்டியலில் பின்தங்கிய நெதர்லாந்து அணியின் பேட்டர்கள், முன்னணியில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் முன்பு சோபிக்கவில்லை.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து கேப்டன்:
நெதர்லாந்து அணியின் பேட்டர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸின் இறுதியில் சில ஓவர்களில் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை சரசரவென உயர்த்தினார். மறுபுறம் புதிதாக களமிறங்கிய ரோலஃப் வான் டெர் மெர்வீயும் கைகொடுக்க நெதர்லாந்து அணியின் ஸ்கோர் 200-ஐ கடந்தது. தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸின் நெதர்லாந்து அணியின் கேப்டன் மற்றும் பந்துவீச்சாளரான ஆரயன் டட்டின் அதிரடியால் 240 ரன்களைக் கடந்தது நெதர்லாந்து. நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்களைக் குவித்து, தென்னாப்பிரிக்காவிற்கு 246 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து.