2028 ஒலிம்பிக் போட்டி - புதிதாக 5 விளையாட்டுகள் சேர்ப்பு
2028ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு கூட்டமானது அண்மையில் மும்பை மாநகரில் நடந்தது. அந்த கூட்டத்தில் தான் கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்ஸில் சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. இதற்கான வாக்கெடுப்பில் 2 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், ஒருவர் வாக்களிக்க மறுத்துள்ளார். மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டியினை சேர்க்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்ததால் தற்போது மீண்டும் கிரிக்கெட் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், நடக்கவுள்ள 2028-ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் டி-20 போல் தான் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குத்துசண்டை போட்டியினை சேர்ப்பது குறித்த முடிவு நிறுத்தி வைப்பு
மேலும், ஒலிம்பிக் போட்டியின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பாட்டு குழுவினர் முன்மொழிவு திட்டத்தினை சமர்பித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, அவர்கள் அதில் 2028ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் 5 புதிய விளையாட்டுகளை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதனிடையே இவர்களின் கோரிக்கையினை சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி அமர்வு ஏற்றதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட்-டி20, ஸ்குவாஷ், பிளாக் ஃபுட்பால், பேஸ்பால் மற்றும் லாக்ரோஸ்(சிக்ஸர்கள்) உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெறவுள்ளது. அதேபோல் இந்த போட்டியில் குத்துசண்டை போட்டியினை சேர்ப்பது என்பது குறித்த முடிவினை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.