பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகையின் மதிப்பு
இந்தியாவின் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பிரச்சாரம் ஆகஸ்ட் 11 அன்று மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடாவின் வெளியேற்றத்துடன் இறுதியாக முடிவுக்கு வந்த நிலையில், இந்த முறை இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது. மனு பாக்கர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற சிறப்பை பாரிஸ் ஒலிம்பிக்கில் பெற்றார். அதே நேரத்தில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது பதக்கத்தை பெற்றார். பதக்கம் வென்றவர்கள்: வெள்ளி : நீரஜ் சோப்ரா வெண்கலம் : மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசேலே, இந்திய ஆடவர் ஹாக்கி அணி, அமன் ஷெராவத்.
போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை
துப்பாக்கிச் சுடுதலில் சாதனை படைத்த மனு பாக்கருக்கு மத்திய அரசு ரூ.30 லட்சம் பரிசு வழங்கியது. கலப்பு அணி போட்டியில் மனுவுடன் இணைந்து பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங்கிற்கு ரூ. 22.5 லட்சத்தை மத்திய அரசு வழங்கியது. இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ஹாக்கி சம்மேளனம் தலா ரூ.15 லட்சம் மற்றும் உதவி ஊழியர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கியுள்ளது. ஹாக்கி வீரர்களுக்கு ஒடிஷா மற்றும் பஞ்சாப் அரசுகளும் பரிசுகளை அறிவித்துள்ளன. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் என்ற சாதனை படைத்த ஸ்வப்னில் குசேலேவுக்கு பரிசுத் தொகையாக ரூ.1 கோடியை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.