19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப்
டென்னிஸ் விளையாட்டின் நான்கு கிராண்டுஸ்லாம் தொடர்களுள் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இன்றைய இறுதிப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதேயான கோகோ காஃபும், பெலரஸைச் சேர்ந்த அரீனா சபலென்காவும் பலப்பரீட்சை செய்தனர். இரண்டு மணி நேரம், ஆறு நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டியில் 2-6, 6-3, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கோகோ காஃப் தன்னுடைய முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார். தற்போது யுஎஸ் ஓபன் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கும் இவர், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
யுஎஸ் ஓபன் பட்டத்தை வெல்லும் மூன்றாவது இளம்பெண்:
டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் ஆறாவது இடத்திலிருக்கும் கோகோ காஃப், இரண்டாமிடத்திலிருக்கும் அரீன சபலென்காவை தோற்கடித்திருக்கிறார். மேலும், அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் பட்டியலில் அரீனா சபலென்கா முதலிடத்தைப் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிரேசி ஆஸ்டின் மற்றும் செரீனா வில்லியம்ஸூக்கு அடுத்தபடியாக, யுஎஸ் ஓபன் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வெல்லும் இளம்பெண்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்திருக்கிறார் கோகோ காஃப். இளம் வயதிலேயே தன்னுடைய முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கும் கோகோ காஃபுக்கு, இணையவாசிகள் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், தன்னுடன் திறனை சந்தேகித்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கோகோ காஃப்.