போலி மருத்துவத் தகவல் பகிர்வு குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கும் யூடியூப்
யூடியூப் தளத்தில் பொய்யான மற்றும் தவறான மருத்துவத் தகவல்களை பகிர்வதைத் மற்றும் பரவுவதைத் தடுக்கும் வகையில் தங்களது கொள்கைகள் மற்றும் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டிருப்பதாக, தங்களது வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். பல்வேறு யூடியூபர்கள் அதிக பார்வைகளைப் பெற வேண்டும் என்பதற்காக, பொய்யான மருத்துவத் தகவல்களை வழங்கி வருகின்றனர். இவ்வாறு தவறான மற்றும் பொய்யான மருத்துவத் தகவல்களை வழங்கும் வீடியோக்களை தங்களது தளத்திலிருந்து நீக்கியும், அவற்றை பதிவிடுபவர்களை தங்கள் தளத்திலிருந்து தடை செய்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது யூடியூப். யூடியூபில் மருத்துவத் தகவல்கள் பதிவீடு தொடர்பாக புதிய வதிமுறைகள் பலவற்றை கொண்டு வந்திருக்கிறது அந்நிறுவனம். அந்த விதிமுறைகளைப் பின்பற்றாத பட்சத்தில், மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான தகவல்களைப் பரப்பினால் நடவடிக்கை:
உதாரணத்திற்கு, முறையாக கண்டறியப்படாத ஒரு மருத்துவ முறையைக் கூறி, இது குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்தும் எனக் கூறினால், அது போலியான தகவலாகக் கருதப்பட்டு தளத்திலிருந்து நீக்கப்படும். கொரோனா பரவிய நேரத்தில், கொரோனா என்ற ஒரு நோய் பரவலே இல்லை, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை எனக் கூறி பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இது போன்று மருத்துவம் குறித்து போலியான தகவல்களைக் கூறும் வீடியோக்களும் நீக்கப்படும். மருத்துவ முறைகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை பதிவிட்டு, பயனாளர்களை முறையான மருத்துவ வழிகாட்டல் பெற விடாமல் தடுக்கும் வகையிலான வீடியோக்களை பதிவிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தங்கள் வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது யூடியூப்.