இந்தியாவில் வெளியானது புதிய ஷாவ்மி பேடு 6.. என்னென்ன வசதிகள்?
இந்தியாவில் கடந்த ஆண்டு தங்களுடைய 'பேடு 5' டேப்லட்டை வெளியிட்டது ஷாவ்மி. தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக 'பேடு 6' டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல் மற்றும் 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கொண்ட டாப் எண்டு மாடல் என இரண்டு வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது பேடு 6. இந்த பேடு 6-உடன், இதோடு சேர்த்துப் பயன்படுத்தும் வகையில், ரூ.5,999 விலையில் ஸ்மார்ட் பென், ரூ.4,999 விலையில் கீபோர்டு கேஸ் மற்றும் ரூ.1,599 விலையில் பேடு 6 கேஸ் ஆகியவற்றையும் வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி. இத்துடன் ரூ.1,399 விலையில் ரெட்மீ பட்ஸ் 4-ம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 14-உடன் வெளியாகியிருக்கிறது பேடு 6.
ஷாவ்மி பேடு 6: வசதிகள் மற்றும் விலை
144Hz ரெப்ரெஷ் ரேட், டால்பி விஷன் சான்றிதள், HDR 10+ ஆகியவற்றுடன் கூடிய 11 இன்ச் 2.8K IPS டிஸ்பிளேவைப் பெற்றிருக்கிறது பேடு 6. இதில் ஸ்னாப்டிராகன் 870 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது ஷாவ்மி. பேடு 5-ல் கொடுக்கப்பட்ட டால்பி அட்மாஸ் வசதியுடன் கூடிய குவாடு ஸ்பீக்கர் செட்டப்பை புதிய பேடு 6-லும் அளித்திருக்கிறது ஷாவ்மி. பின்பக்கம் 13MP கேமராவும், முன்பக்கம் 8MP கேமராவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்துடன், 33W சார்ஜிங் வசதியுடன் கூடிய 8,840mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்காக வை-பை 6, ப்ளூடூத் 5.2 மற்றும் டைப்-சி போர்ட் ஆகிய வசதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், செல்லுலார் கனெக்டிவிட்டி வசதி இல்லை. இதன் 6GB வேரியன்ட்டானது ரூ.26,999 விலையிலும், 8GB வேரியன்ட்டானது ரூ.28,999 விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.