Page Loader
இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை!
இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்

இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை!

எழுதியவர் Prasanna Venkatesh
May 20, 2023
04:08 pm

செய்தி முன்னோட்டம்

குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்றைய நிலையில் மிகவும் அதிகரித்திருக்கிறது. பெற்றோர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளிடமும் ஊடுருவியிருக்கிறது. குழந்தைகள் அதிகம் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனப் பலரும் கூறிவரும் நிலையில், லிங்க்டுஇன் தளத்தில் இது குறித்த பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் ஷாவ்மி இந்தியாவின் முன்னாள் சிஇஓ-வான மனு குமார் ஜெயின். அந்தப் பதிவில் குழந்தைகள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசியிருக்கும் அவர், அது குறித்த செபியன் லேப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றையும் சேர்த்திருக்கிறார். செபியன் லேப்ஸ் நிறுவனத்தின் அறிக்கையானது இளம் வயதில் மின்னணு சாதனப் பயன்பாட்டால் என்ன விதமான விளைவுகள் ஏற்படும் என்பதை முன்னிலைப்படுத்துவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், அது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்மார்ட்போன்

இளம் வயதில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் பயன்பாடு: 

இளம் வயதில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு வளர்ந்த பின்பு மன நோய் பிரச்சினைகள் ஏற்படுவதாக செபியன் லேப்ஸின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 10 வயதிற்குள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திய பெண்களில் 60-70% பேர் வளர்ந்த பின்பு மன நோய் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதே போல், 10 வயதிற்குள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திய ஆண்களில் 45-50% பேருக்கு வளர்ந்த பின்பு மன நோய் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்மார்ட்போனுக்கு ஈடாக பெற்றோர்களே தங்களுடைய குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் அவர். மேலும், ஸ்மார்ட்போன்களுக்கு தான் எதிரியல்ல எனக் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கும் அவர், அதனை அனைவரும் பாதுகாப்பான வகையில் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.