X தளத்தில் புதிய கிளிப்பிங் டூல் அறிமுகம்: இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு சூப்பர் வருமான வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக ஊடக தளமான X, கன்டென்ட் க்ரியேட்டர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் தங்கள் பார்வையாளர்களுடன் இன்னும் தீவிரமாக ஈடுபாட்டை ஏற்படுத்த உதவும் வகையில் புதிய வீடியோ கிளிப்பிங் டூல் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் நீண்ட வீடியோக்களை சிறிய துண்டுகளாக கட் செய்து பதிவிடுவது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், விளம்பர வருவாயை பெருக்குவதற்கும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும். நீண்ட வீடியோக்களை பயனர்கள் தங்களுக்கு தேவையான சிறிய கிளிப்களாக எடிட் செய்து பிளாட்ஃபார்மில் பதிவிட இது உதவுகிறது. ஒவ்வொரு கிளிப்பிலும் Clip from என்ற லேபிள் இடம்பெறும். இது பார்வையாளர்களை நேரடியாக அசல் வீடியோவுக்கும், அதை உருவாக்கிய கிரியேட்டரின் பக்கத்திற்கும் அழைத்துச் செல்லும்.
வெகுமதி திட்டம்
வருமானம் ஈட்டும் வாய்ப்பு
இந்த புதிய கிளிப்பிங் அம்சத்தின் வருகையானது எக்ஸ் தளத்தின் அசல் உள்ளடக்க வெகுமதி திட்டத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் அசல் வீடியோவை உருவாக்கியவரும், அதிலிருந்து கிளிப் தயாரித்தவரும் என இரு தரப்பினருமே வருமானம் ஈட்ட முடியும் என X தெரிவித்துள்ளது.
இருப்பினும், அனைத்து வீடியோக்களும் இந்த வெகுமதிக்கு தகுதிபெறாது. பயனர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.
எக்ஸ் தளத்தில் வீடியோ தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்தவும், பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இந்த புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான சுவாரஸ்யமான வீடியோ உள்ளடக்கங்களை எளிதாக பகிர வழிவகை செய்வதன் மூலம், உலகளவில் அதிகமான கிரியேட்டர்களை தங்களது தளத்திற்கு ஈர்க்க முடியும் என்று X நம்புகிறது.