தவறான தகவல்களைத் தடுக்க எக்ஸ் தளத்தில் புதிய அம்சம் வெளியீடு; இனி அனைத்து கணக்குகளின் இருப்பிடமும் தெரியவரும்
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான எக்ஸ், பயனர்கள் மத்தியில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தவறான தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைக் கண்டறியவும், "இந்த சுயவிவரம் பற்றி" (About This Profile) என்ற புதிய வெளிப்படைத்தன்மை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், ஒரு கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது, அது எங்கிருந்து இயங்குகிறது போன்ற விவரங்களை அறிய முடியும். புதிய அம்சமானது, ஒரு கணக்கு உருவாக்கப்பட்ட தேதி, பயனர் பெயர்கள் எத்தனை முறை மாற்றப்பட்டன, அக்கணக்கின் அடிப்படை இருப்பிடம், மற்றும் அந்தச் செயலி ஆப் ஸ்டோரில் இருந்தா அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தா பதிவிறக்கம் செய்யப்பட்டது போன்ற முக்கியத் தரவுகளைப் பயனர்களுக்குக் காட்டுகிறது.
ஏமாற்றுதல்
வேறு இடத்திலிருந்து ட்வீட் செய்து ஏமாற்ற முடியாது
ஒருவர் ஒரு நாட்டில் இருந்து ட்வீட் செய்வதாகக் கூறி, ஆனால் அவரது இருப்பிடம் வேறு இடத்தில் இருந்தால், அதை எளிதில் கண்டறிந்து போலி கணக்குகளை அடையாளம் காண இது உதவும். எக்ஸ் தளத்தின் தயாரிப்புத் தலைவர் நிகிதா பியர் இந்த அம்சத்தைப் பற்றிக் கூறுகையில், இது ஒரு கணக்கு நம்பகமானதா அல்லது தவறான தகவல்களைப் பரப்ப முயற்சிக்கிறதா என்று மக்கள் மதிப்பிடப் போதுமான தகவல்களை வழங்கும் என்று தெரிவித்தார். தற்போது இந்த அம்சம் ஆரம்பக்கட்ட நிலையில் மெதுவாகப் படிப்படியாக வெளியிடப்படுகிறது.
தேர்வு
பயனர்களின் விருப்பத் தேர்வு
பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மெனுவின் கீழ், தாங்கள் வசிக்கும் குறிப்பிட்ட நாட்டைக் காட்டலாமா அல்லது ஒரு பரந்த பிராந்தியத்தைக் காட்டலாமா என்பதைத் தேர்வு செய்யச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், பயனர்களின் தனியுரிமை குறித்த கவலைகளையும் சமன் செய்யும் முயற்சியாகக் கருதப்படுகிறது. போலி மற்றும் ஏஐ மூலம் உருவாக்கிய கணக்குகளால் தவறான தகவல்கள் பெருகி வரும் இந்தச் சூழலில், எக்ஸ் தளத்தின் இந்த நகர்வு குறிப்பிடத்தக்கதாகும்.