ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திய எக்ஸ்
எக்ஸ் தளத்தில் (முன்னதாக ட்விட்டர்) பயனாளர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வகையிலான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எக்ஸ் தளத்தில் பல்வேறு பயனாளர்களுக்கு புதிய ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறித்த நோட்டிபிகேஷன்களையும் செயலியின் மூலமே அனுப்பியிருக்கிறது எக்ஸ். கடந்த ஆண்டு ட்விட்டரை வாங்கிய பிறகு, அதனை வெறும் குறும்பதிவுத் தளமாக மட்டுமில்லாமல் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான தளமாக மாற்றத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே (பெயர் மாற்றம் உட்பட) பெரிய அளவிலான மாற்றங்களைக் கண்டு வருகிறது எக்ஸ். அதன் ஒரு பகுதியாக இந்தப் புதிய ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
எக்ஸில் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள்:
ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் வசதியை அறிமுகப்படுத்திய கையோடு, யார் யார் தங்களுக்கு கால் செய்யலாம் என்பதனை கட்டுப்படுத்தும் வசதியையும் பயனாளர்களுக்கு அளித்திருக்கிறது எக்ஸ். அதன்படி, நம்முடைய தொடர்புப் பட்டியலில் உள்ளவர்கள், நாம் எக்ஸில் பின்தொடர்பவர்கள் மற்றும் வெரிஃபைடு கணக்குகள் என மூன்று தேர்வுகளைக் கொடுத்திருக்கிறது. இந்த மூன்றையுமே கூட பயனாளர்கள் டிக் செய்து மாற்றம் செய்தும் கொள்ளலாம். எக்ஸ் பயனர்கள் மற்றொரு எக்ஸ் பயனாளருக்கு கால் செய்ய, அவர்களுடைய DM-க்கு சென்று மேற்புறம் வலது பக்க மூலையில் கொடுக்கப்பட்டிருக்கும் காலிங் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஆடியோ காலா அல்லது வீடியோ காலா என்பதனை தேர்வு செய்து கால் செய்து கொள்ளலாம்.