ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ?
இதுவரை சந்திரனிற்கு பல நாடுகள் பல்வேறு திட்டங்களின் கீழ் விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே இதுவரை அதன் தென்துருவப் பகுதியை அடைந்ததில்லை. அனைத்து திட்டங்களுமே பூமியைப் பார்த்திருக்கும் நிலவின் பக்கத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், வரும் ஜூலை 14-ல் செலுத்தப்படவிருக்கும் சந்திராயன் -3 தான் முதன் முதலில் நிலவின் தென்துருவப் பகுதியை அடையவிருக்கும் கலமாக இருக்கப் போகிறது. நிலவின் பூமத்திய ரேகைக்கு அருகே, அதாவது கிட்டத்தட்ட பூமியைப் பார்த்திருக்கும் பக்கத்தில், விண்கலங்களையோ அல்லது லேண்டர்களயோ தரையிறக்குவது, அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வது தென்துருவப் பகுதியில் மேற்கொள்வதை விட சற்று எளிதானது. ஏனெனில், பூமத்திய ரேகைக்கு அருகே நிலவின் மேற்பரப்பும், வெப்பநிலையும் நாம் பரிசோதனை செய்வதற்கு ஏதுவான நிலையைக் கொண்டிருக்கின்றன.
நிலவின் தென்துருவப் பகுதிகள் எப்படி இருக்கும்?
நிலவின் தென்துருவப் பகுதியானது மிகவும் கரடுமுரடான பகுதியாக இருக்கும் என்பதை இதுவரை நிலவை சுற்றி வந்த ஆர்பிட்டர்கள் மூலம் கண்டறிந்திருக்கின்றனர். மேலும், சூரிய வெளிச்சமே படாத தென்துருவப் பகுதிகள் எப்போதும் இருளடர்ந்தே இருக்கும். அதோடு சூரிய வெளிச்சமே படாத காரணத்தினால், அங்கு நிலவின் வெப்பநிலை -230 டிகிரி செல்சியசுக்கும் கீழேயே இருக்குமாம். இதனால் அறிவியல் உபகரணங்களை அந்த சூழ்நிலையில் இயக்குவது மிகவும் கடினம். தென்துருவப் பகுதியில் சமதளத்தை விட பள்ளத்தாக்குகளே அதிகம் இருக்கும். சில மீட்டர்கள் தொடங்கி பல ஆயிரம் கிலோமீட்டர் அளவுடைய பள்ளத்தாக்குகள் நிறைந்திருக்கின்றன. ஆனால், இன்னும் அந்தப் பகுதி குறித்து பெரிதாக நாம் எதையும் அறிந்து கொள்ளவில்லை. எனவே தான் இம்முறை தென்துருவப் பகுதியை ஆராய்வதற்கான திட்டத்தை வடிவமைத்திருக்கிறது இஸ்ரோ.